83 நாட்களில் 1000 பதிவுகள்!

Monday, June 4, 2007

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா திட்டம்

2007-05-15

இன்னும் எட்டு ஆண்டுகளில் வெண்வெளிக்கு மனிதனை அனுப்ப போவதாக மே 9-ஆவது தேதியன்று இந்திய விண்வெளி கழகத்திடமிருந்து வந்த செய்தி இந்திய வெண்வெளி ஆர்வலரிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த செய்தி நமது "சற்றுமுன்"வலைத்தளத்திலும் இடம் பெற்றது.

இந்திய வெண்வெளி கழகம் என்பது இந்தியர்கள் உலக அளவில் பெருமை பட்டுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான சாதனைகளில் ஒன்று என்றால் அதை மறுப்பதற்கில்லை. மோசமான பொருளாதார நிலைமையிலும் ஆர்வம் மற்றும் கடும் உழைப்பை மட்டுமே நம்பி நம் விஞ்ஞானிகள் இந்த அளவுக்கு இயங்கிக்கொண்டு இருப்பதே பாராட்டுக்குறிய விஷயம் தான். செயற்கை கோள்களை வேற்று நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து ஏவுவதில் இருந்து சுயமாக பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ஏவுகளங்களை ஏவுவது வரை வளர்ந்துவிட்ட நமது விண்வெளிக்கழகத்தின் வளர்ச்சி பெரிமிதத்திற்குறியது . இன்னிலையில் விண்வெளிக்கழகத்தின் இந்த அறிவிப்பையும் அதன் காரண காரியங்களை பற்றியும் சற்றே இந்த பதிவில் பார்ப்போம்.

விண்வெளிக்கு மனிதனை இது வரை மூன்று நாடுகள் மட்டுமே அனுப்பி வைத்திருக்கின்றன. முதன் முதலில் 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று ரஷ்யா மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது. பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் எல்லா துறைகளிலும் நேரடியாகவே போட்டி போட்டுக்கொண்டன. இதன் ஒரு பகுதியாக விண்வெளிக்கு மனிதனை முதலில் அனுப்புவது யார் என்ற போட்டியில் ரஷ்யா வெற்றி பெற்றது. ரஷ்யாவின் இந்த சாதனை முடிந்த 23 நாட்களிலேயே அமெரிக்கா தனது நாட்டவரை விண்வெளிக்கு அனுப்பி தாங்களும் விண்வெளிப்போரில் ஒன்றும் சோடை போகவில்லை என்று காட்டிக்கொண்டது. இருந்தாலும் ரஷ்யாவை வெண்வெளிக்கு முதன்முதலில் போக விட்டது அமெரிக்காவுக்கு ஒரு பெரும் அவமானமாக கருதப்பட்டது.இதனால் தான் 1969-இல் நிலவுக்கு மனிதனை அனுப்பி அது தன் அவமானத்திற்காக பழி தீர்த்துக்கொண்டது. அதன் பின் பல ஆண்டுகளாக எந்த நாடும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை. ஆனால் அமெரிக்காவும் ரஷ்யாவும் மாற்றி மாற்றி விண்வெளிக்கு பல களங்களை அனுப்பிக்கொண்டுதான் இருந்தது. அதில் அவர்கள் நாட்டு வீரர்களை தவிர மற்ற நாட்டு வீரர்களையும் பயிற்சிக்காக ஏற்றி கொண்டு சென்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவை சேர்ந்த ராகேஷ் சர்மா 1984ஆம் வருடம் Soyuz T-11 விண்களம் மூலமாக விண்வெளிக்கு பயனப்பட்டார். அதன் பிறகு மூன்றாவதாக 2003ஆம் வருடம் யாங் லிவெய் (Yang Liwei) என்பவரை சீனா வெண்வெளிக்கு அனுப்பியது.
சீனாவின் இந்த செயலினால் தான் இந்தியாவிற்கும் மனிதனை வெண்வெளிக்கு அனுப்பும் ஆசை தொற்றிக்கொண்டுள்ளது என கொள்ளலாம்.
1950 1960-களில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நடந்த பனிப்போரை போன்று இன்று ஆசிய நிலப்பரப்பில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையில் பல துறைகளில் போட்டா போட்டி இருந்து வருவது தெரிந்த விஷயம் தான். இந்த போட்டியில் வெற்றிபெருவதற்கான முயற்சி என்பதை தவிர இந்த விஷயத்தினால் வேறு என்ன பயன்கள் இருக்க முடியும் என கொஞ்சம் பார்க்கலாம்.

உலக அரங்கில் விண்வெளித்துறையில் இந்தியா என்ற பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் கூட அது செயற்கைகோள் அனுப்புவதோடு நின்று விடுகிறது. சமீபத்தில் உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து சர்வதேச விண்வெளி மையம் (International space station) அமைக்க ஆயுத்தங்கள் நடைபெற்ற போது இதில் இந்தியாவின் பங்களிப்பு ஒன்றுமே இல்லாதது ஏமாற்றம் அளிக்க கூடிய விஷயம். உலக அரங்கில் வெண்வெளித்துறையில் இந்தியாவை ஒரு பெறும் சக்தியாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதை மாற்றி உலக அளவில் மனித இனம் விண்வெளியில் செய்யும் ஆராய்ச்சிகளில் பங்கு கொள்ள இந்த முயற்சி பெரும் பங்கு வகிக்கும்.

விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதால் இதை போன்ற அரசியல் சார்ந்த விஷயங்களை தவிர விஞ்ஞான ரீதியாக வேறு என்ன பயன் என்று பார்க்கலாமா??
சந்திர மண்டலத்தில் ஆய்வு என்பது அமெரிக்கா போன்ற நாடுகள் பெரும் உற்சாகத்துடன் ஈடுபடும் ஆராய்ச்சி தலைப்பு. சந்திர மண்டலத்தில் கிடைக்கும் கற்கள்,பாறைகள் போன்றவை வைத்து நம் சூரிய குடும்பத்தை பற்றியும் அண்டத்தின் உருவாக்கத்தை பற்றியும் பல விஷயங்களை அறியும் முயற்சி நடை பெற்று வருகிறது. இது தவிர செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான முயற்சிகளிலும் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. இந்த முயற்சிகளில் நிலவை ஒரு நடுநிலை ஏவு மையமாக உபயோகித்துக்கொள்வதின் பங்கு இன்றியமையாதது. இதையும் தவிர நிலவை, ஆராய்ச்சி மையம் அமைத்துக்கொள்வதற்கோ அல்லது வருங்காலத்தில் குடி பெயர்ந்து செல்லவும் உபயோகித்துக்கொள்ளலாம் என்ற கருத்துக்களும் உண்டு.
நிலவில் விலை மதிப்பற்ற கணிமங்கள் பல புதைந்திருப்பதாகவும் இதை எல்லாம் வருங்காலத்தில் மனிதன் உபயோகிக்க போட்டா போட்டி நிலவலாம் என்று கூறப்படுகிறது. இதையும் தவிர நிலவில் இருந்து சூரிய ஒளியை தேக்கி எரிபொருளாகவும் உபயோகித்துக்கொள்ளலாம். இப்படி பலவிதங்களிலும் நிலவில் மனிதன் செய்வதற்கு ஆராய்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன.
இவையெல்லாவற்றிற்கும் விண்வெளியில் மனிதன் வாழ்ந்து பயிற்சி பெறுவது இன்றியமையாதது. நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் தாண்டி விண்வெளியில் பல தரப்பட்ட ஆராய்ச்சிகளை செயவதற்கும் விண்வெளியில் மனிதனில் இருப்பு அவசியம். இப்பொழுதெல்லாம் இயந்திர மனிதர்கள் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் சாதாரணமாக ஒரு ஸ்க்ரூவை முடிக்கிவிட தர வேண்டிய கட்டளைகளை தருவதற்குள் ஒரு மனிதன் அதே செயலை சத்தமே இல்லமல் திறம்பட செய்து முடிப்பான். அதையும் தவிர வெண்வெளியில் அதிமாக முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் அடங்கிய ஆராய்ச்சிகள் நடத்தும் போது அங்கே மனிதனின் இருப்பு அவசியமாகி விடுகிறது.

இந்தியா போன்ற ஏழை நாட்டில் இவ்வளவு செலவு செய்து இவ்வளவு பெரிய ஆராய்ச்சிகள் எல்லாம் தேவையா என்று கேள்விகள் எழுந்தாலும்,நாட்டின் முழுமையான வளர்ச்சிக்கும்,உலக அளவில் வல்லரசாக இந்தியா முன்னேறும் முயற்சிக்கு இது போன்ற விஷயங்கள் தேவை என்றே தோன்றுகிறது.

மாயாவதியின் மாயாஜாலம்

2007-05-15

மதுரையில் நடந்த ஒரு நாள் வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், 'ரவுடிகளை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துங்கள்' என்ற கோஷத்தை பிச்சைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தமிழகத்தில் மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள்.(இந்தப் பாரா 'எதற்கு?' என்று எண்ணுபவர்கள் உடனடியாக கடைசி பாராவிற்குத் தாவவும்)

இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் புதிய பெண் முதல் மந்திரியாக பதவியேற்றிருக்கிறார் மாயாவதி. ஏற்கெனவே இதற்கு முன் மூன்று முறை முதல்வர் பொறுப்பை ஏற்றபோதும், ஒரு தடவைகூட முழுமையாக பதவிக் காலத்தை அனுபவிக்காத துர்பாக்கியம் மாயாவதிக்கு நேர்ந்திருக்கிறது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்கியபோது, அவருடன் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் மாயாவதி. காலப்போக்கில் "தலித் மக்களுக்கு தன்னையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் விட்டால் காப்பாற்ற வேறு நாதியே இல்லை.. எல்லோரும் என்னை வணங்குங்கள்.." என்று சொல்கின்ற அளவுக்கு தன்னை உ.பி. மக்களைக் காக்க வந்த துர்கையாகவே நினைத்துக் கொண்டார் மாயாவதி.

1993-ம் ஆண்டு முதன் முறையாக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை இணைந்து உ.பி.யில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தன. ஆனால், 1995-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மாயாவதி மீது நடந்த ஒரு தாக்குதல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே உரசல் அதிகமாகிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.

அடுத்த நாளே, இரவோடு இரவாக பாரதிய ஜனதாவின் ஆதரவைப் பெற்று அதாவது ஜூன் 3-ம் தேதி முதல் முறையாக உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார். ஆனால், இதுவும் அக்டோபர் மாதமே அல்பாயுசில் முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து 'ஆறு மாதங்களுக்கு ஒரு முதல்வர்' என்ற உடன்பாட்டில் 1997-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மாயாவதி இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, இந்தக் கூட்டணியும் மாயாவதியின் பிடிவாதப் போக்கால் முடிவுக்கு வந்துவிட்டது. மாயாவதியும் ஆட்சிப் பொறுப்பை இழந்தார்.

பின்னர் 2002-ம் ஆண்டு மே 3-ம் தேதி முதல் 2003-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதிவரை மூன்றாவது முறையாக மாயாவதி முதல்வராக இருந்தார். அமைச்சர் பதவி கிடைக்காமல் ஏங்கித் தவித்துப் போயிருந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை முலாயம்சிங் தன் சமாஜ்வாதிக் கட்சிக்கு குச்சி மிட்டாயைக் காட்டி அழைக்க அவர்களும் வந்தார்கள்.
அமைச்சர் பதவிக்காக முலாயம் சிங்கின் கட்சியில் அவர்கள் கோஷ்டி, கோஷ்டியாகச் சேர.. 'உள்ளே-வெளியே' ஆட்டம் உ.பி.யில் ஜோராக நடந்தது. தான் நினைத்ததை சாதித்தே விட்டார் முலாயம் சிங். உ.பி.யில் அவர் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தது.

ஆனால், இந்த முறை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இருந்தார் மாயாவதி. கூடவே இன்னொரு தொல்லையும் மாயாவதிக்கு உண்டு.

சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் தாஜ்மஹால் வணிக வளாக ஊழல் வழக்கு, மாயாவதியை இன்றுவரையிலும் தூங்க விடாமல் செய்து வருகிறது. கூடவே அரசியல்வாதிகளுக்கே உரித்தான சொத்துக் குவிப்பு வழக்கும் வகை, தொகையில்லாமல் அவர் மேல் குவிந்திருக்கிறது.. இத்தனையையும் அவர் சமாளிக்க வேண்டுமென்றால் அவர் கையில் பதவி இருந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது.

எதைச் செய்தாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும். தான் லக்னோவிலிருந்து அலகாபாத் சென்றால்கூட விதியை மீறியதாக வழக்குப்போடும் முலாயம்சிங்கையும், அவரது தோழர் அமர்சிங்கையும் விரட்டியே ஆக வேண்டும் என்ற வெறியை பதவியில்லாமல் இருந்த இந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துக் கொண்டேயிருந்துள்ளார் மாயாவதி.

பழைய பாட்டையே திரும்பவும் பாடிக் கொண்டிருந்தால் வழக்கமாகப் பிச்சை போடுபவர்கள்கூட போட மாட்டார்கள் என்பது மாயாவதிக்கும் தெரிந்தது. புரிந்து கொண்டார்.

உ.பி.யைப் பொறுத்தமட்டில், மண்டல் வழக்கு தீர்ப்பு மற்றும் அயோத்தி ராமர் கோவில் ஆகிய கோஷங்களின் மூலம் முற்பட்ட வகுப்பினர் ஓட்டுக்களை பாரதிய ஜனதா பெற்றிருந்தது.

உ.பி.யில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ¤க்கு தலித், முஸ்லீம் மற்றும் பிராமணர்கள் ஆகிய சமூகத்தினரின் ஆதரவு அதிகம் இருந்து வந்தது. இந்த மூன்று சமூகங்களின் மக்கள் தொகை அம்மாநில மக்கள் தொகையில் 60 சதவிகிதம். இந்தச் சமூகங்களை கவர்ந்திழுக்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் இழந்து வந்தபோதுதான் அதை பகுஜன் சமாஜ் கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் இதற்கான அடித்தளத்தை அமைத்தபோதும் அதை கடந்த 10 ஆண்டுகளாக மாயாவதி மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்தத் தேர்தலில் அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் சென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளார் மாயாவதி.

"பிராமணர்கள் உட்பட மேல் சாதியினரை எப்போது, எங்கு பார்த்தாலும் அடித்து உதை.. எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த மாயாவதியின் பெயரை எவன் வந்து கேட்டாலும் சொல்.." என்று அவர் கட்சித் தலைவர் கன்ஷிராமின் முன்னணியில் லக்னோவில் தன்னுடைய முதல் அறிமுகக் கூட்டத்திலேயே பேசி பரபரப்பை உண்டாக்கிய இந்த உன்னதத் தலைவி, இந்தத் தேர்தலில் அப்படியே பிளேட்டை தலைகீழாக மாற்றிப் போட்டார்.

அனைவரையும் அரவணைத்துச் சென்றால்தான் தான் லக்னோவில் கோலோச்ச முடியும் என்பதைக் கவனித்தில் வைத்தவர் முதலில் பிராமணர்களுடன் நெருங்கினார். "நான் முன்ன மாதிரியில்லே.." என்றெல்லாம் சொல்லி கோவில்களுக்கு அவர்களுடனேயே நடந்தார். வீடுகளுக்குள் நுழைந்து "பிராமணர்களின் தெய்வ வழிபாடு இளைய சமுதாயத்தினரை மிகவும் மேம்படுத்தும்.." என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

தனது கட்சி சார்பில் முஸ்லீம்கள் 65 பேருக்கும், 88 பிராமணர்களுக்கும் போட்டியிட சீட் கொடுத்தார். இதற்கு முன் எந்தக் கட்சியும் இந்தச் சமூகத்தினருக்கு இவ்வளவு சீட்டுக்கள் தந்ததில்லை என்பதால், மாயாவதி மீது அவர்களின் நம்பிக்கை மென்மேலும் உயர்ந்தது.

தேர்தல் பிரச்சாரத்திலும் தனது கட்சி சின்னமான யானையை மிக உயர்வாகக் குறிப்பிட்டு, "இது யானை மட்டுமல்ல.. கணேசர் கடவுள். அனைத்து கடவுள்களையும் உள்ளடக்கியது.." என்று புதிய கோஷத்தை முன்னிறுத்தினார். ஆஹா.. கடவுள்கள் யாருக்கெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் உதவுகிறார்கள் பாருங்கள்..?

ஏற்கெனவே ராமர் கோவில் விவகாரத்தில் கோவிலை கட்டலாமா? வேண்டாமா என்பதிலேயே பாரதிய ஜனதா குழப்பிக் கொண்டிருக்க.. கல்யாண்சிங்கிற்கு பிறகு வலுவான தலைவரும் பாரதிய ஜனதாவிற்கு இல்லாமல் போக.. பிராமணர்கள் தங்களை வீடு தேடி வந்த தலைவருக்கு இப்போது ஆதரவு கொடுப்போம். ஜெயித்த பிறகு எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற ரீதியில் ஆதரவு கொடுக்க முன் வந்தார்கள்.

முலாயம் என்னென்னமோ முனங்கிப் பார்த்தார். "ஜாதியைக் கை விட்டுவிட்டார் மாயாவதி. என் தம்பிகளே.. என்னிடம் ஓடி வாருங்கள்.." என்றார். ஏற்கெனவே அவருடன் ஓடிய மாயாவதியின் தம்பிகளை அவர் என்ன செய்தார் என்பதை நேரிலேயே பார்த்தவர்கள், தேர்தலில் சீட் கேட்டு கட்சி அலுவலகம் பக்கம்கூட வரவில்லை.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தன் மனைவி ஜெயாபாதுரியுடன் மேடை தோன்றி முலாயம் சிங்தான் 'எனக்கும் நம்பிக்கை நட்சத்திரம்' என்றார். ஆனால் உ.பி. இளைஞர்கள் தங்களுடைய கனவுக்கன்னிக்குத்தான் ஓட்டு. கனவுக் கன்னியோட மாமனாருக்கெல்லாம் ஓட்டுப் போட முடியாது என்று முடிவு கட்டிவிட்டார்கள்.

கருத்துக் கணிப்புகள் முலாயமை தூங்கவிடாமல் செய்ய.. ஜெயபிரதாவுடன் களத்தில் குதித்து சில டப்பா டான்ஸ் ஆடிப் போன நடிகர், நடிகைகளை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார் கட்சியின் துணைத் தலைவர் அமர்சிங்.
கூடவே நம்ம அம்மா ஜெயலலிதாவும் பெரிய மனசு பண்ணி ஒரு நாள் கால்ஷீட் கொடுக்க.. லக்னோவின் 40 டிகிரி வெயிலில் 40000 மக்கள் மத்தியில் அம்மாவின் ஹிந்தி பேச்சு கலகலத்தது. இப்படி அம்மாவுக்கு ஹிந்து அட்சரப் பிசகாமல் வரும் என்பதை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக முலாயம்சிங்கிற்கு தமிழர்கள் நன்றி தெரிவிக்க வேண்டுமாக்கும். ஆனாலும் இதன் பின்னும் கருத்துக் கணிப்புகள் முலாயம் கஷ்டம் என்று மூக்கு உடைப்பதைப் போல் சொல்லிவிட்டன.

புதிய மாற்றம் மாயாவதிக்கு பலனளித்துவிட்டது. முலாயம்சிங்கின் பழைய, ஓட்டை சைக்கிளை மாயாவதியின் யானை தூக்கியெறிந்துவிட்டது. மாயாவதியே எதிர்பார்க்காததுபோல் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார்.

2002-ம் ஆண்டு தேர்தலில் 98 சீட்டுக்களை வென்றிருந்த மாயாவதிக்கு இப்போது தனிப்பெரும் மெஜாரிட்டியாக 206 தொகுதிகள் கிடைத்தன.
மாயாவதியின் உடன்பிறப்புகளாகப் போட்டியிட்ட 65 முஸ்லீம்களில் 29 பேரும், 88 பிராமணர்களில் 36 பேரும் வெற்றி பெற்று உ.பி.யின் வரலாற்றிலேயே ஒரு புதுவிதத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
முதன்முறையாக மாயாவதி உ.பி.யின் முதல்வராகப் பொறுப்பேற்ற போதே இந்த தலித் பெண்மணி கோட்டையில் கோலோச்சும் காட்சியை மனதில் வைத்து, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் 'அதிசயத்தில் அதிசயம்' என்று வர்ணித்தார். அந்த 'அதிசயத்தை' மறுபடியும் நடத்திக் காட்டியிருக்கிறார் உ.பி.யின் தற்போதைய துர்க்கை..
143 தொகுதிகளை கைப்பற்றி 2002-ம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக இருந்த முலாயம்சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி இப்போது 97 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்கிறது.

அதே சமயம் 2002 தேர்தலில் 88 தொகுதிகளை வென்றிருந்த பாரதிய ஜனதா இந்த முறை 50 தொகுதிகளை மட்டுமே வென்றிருக்கிறது. காங்கிரஸோ, 2002-க்கு இப்ப பரவாயில்லை என்பதைப் போல் கூடுதலாக மூன்று தொகுதிகளுடன் 25-க்கு முன்னேறியிருக்கிறது.

காங்கிரஸ் தரப்பில் ராகுலை முன் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ராகுலோ பிரச்சாரத்தின்போது "நினைத்ததை முடிக்கும் குடும்பம் எங்களது.." என்று சொல்லி கன்யாகுமரிவரை அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இது கட்டுப்படியாகாது என்று நினைத்துத்தான் கடைசி கட்டப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் பிரியங்கா வதேராவை('பிரியங்கா காந்தி' அப்படின்னு யாரும் என்னைக் கூப்பிடக்கூடாதுன்னு அம்மணியே உத்தரவு போட்டுட்டாங்க) அழைத்துக் கொண்டு கிராமம், கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்ய வைத்தார்கள்.

ஒரு ஆறுதலாக, ராகுல்காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதியின் ஐந்து சட்டசபைத் தொகுதிகளில் மூன்றை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அதேபோல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அன்னை சோனியாகாந்தியின் சொந்தத் தொகுதியான ரேபரேலியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கை காங்கிரஸ் தட்டிச் சென்றுள்ளது.
இதுவேறு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாக, "அக்காவுக்கு மவுசா? இல்லாட்டி தம்பிக்கு மவுசா?" அப்படீன்னு உ.பி. முழுக்க ஒரு சர்வே எடுக்குற அளவுக்கு பிரச்சினையைக் கிளப்பியிருக்கு.. ஓ.சி.நெல்சன் கம்பெனிக்காரங்களை அவுகளுக்குத் தெரியாது போலிருக்கு. யாராவது அட்ரஸ் சொல்லி அனுப்பி வைங்கப்பா..

பாரதிய ஜனதா தரப்பில் இந்துத்துவாவை விட்டுவிட்டு வளர்ச்சித் திட்டங்கள் பற்றிப் பேசியது. பிற்படுத்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முன்னிலைப்படுத்தியது போன்றவற்றால் அவர்களுக்கு பிராமணர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.

ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி தோல்வியடைய சட்டம், ஒழுங்கு, மின் பற்றாக்குறை, ஆள் கடத்தல் ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைந்துவிட்டது.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க தேசியக் கட்சிகளின் முக்கியத்துவம் மேலும் குறையத் துவங்கியுள்ளது என்பதும் இந்தத் தேர்தல் மூலம் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
அதே போல் சென்ற 2002-ம் ஆண்டு மாயாவதியையும், முலாயம் சிங்கையும் தூங்க விடாமல் செய்த 49 சுயேச்சைகள் லிஸ்ட், இந்தத் தேர்தலில் 27-ஆக குறைந்துள்ளது ஒருவகையில் உ.பி.யின் அரசியலுக்கு ஆரோக்கியமான செயல் என்றே சொல்லலாம்.

பதவியேற்றிருக்கும் மாயாவதியின் தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்களில் 17 பேர் பெரிய ரவுடிகள், தாதாக்கள் என அறியப்பட்டவர்களாம். இவர்களில் பலருடைய புகைப்படங்கள் வருடக்கணக்காக போலீஸ் ஸ்டேஷனின் ரவுடிகள் பட்டியிலில் தொங்கிக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால் இனி இவர்கள் மாண்புமிகு மந்திரிகள்.

இதில் ஒரு மந்திரி இப்போது ஜெயிலில் உள்ளாராம்.
பைசாபாத் மாவட்டத்தில் உள்ள மில்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ஆனந்த்சென் என்பவர்தான் இந்த ஜெயில் மந்திரி.. இவர் ஜாமீனில் வெளியே வந்துதான் இனி மந்திரி பதவியை ஏற்று அதன் பின்புதான் மக்கள் சேவையில் இறங்க வேண்டுமாம்..

சத்தியவமே ஜெயதே..!

ஜெய்ஹிந்த்

தியாகிகள் தேவை

2007-05-14

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.

நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும். எப்படி? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா, ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.

ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட், கார், 29 இன்ச் கலர் டீவி, வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம். பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Litrecy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா, வாக்காளர் அடையாள அட்டை இல்லை, ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம். கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம்.

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய,் ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம்.

தனிமனித ஒழுக்கம் நமக்கு எல்லாம் மருந்தளவுக்கு கூட இல்லை. நாம சமுதாயத்துக்குனு ஒரு துரும்பைக்கூட அசைக்க மாட்டோம். ஆனா நமக்கு வர தலைவர்கள் மட்டும் தியாகியா இருக்கனும்.

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம். எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது.

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்… மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்…

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)

விளம்பரங்கள் : பலமும், பலவீனமும்

2007-05-09


இன்றைய வர்த்தகத் துறையின் முதுகெலும்பாக இருக்கிறது விளம்பரத் துறை. விளம்பரங்களின் தந்திரங்களை வைத்தே பொருட்களின் விற்பனை நிர்ணயிக்கப்படுகிறது. ஊடகங்களின் வாயிலாக மக்களை எளிதில் சென்றடையும் நிலையில் இன்றைய விளம்பரங்கள் இருப்பதாலும், கடுமையான வர்த்தகப் போட்டி நிலவுவதாலும் இன்றைய விளம்பரங்கள் புதுமையை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

விளம்பரம் செய்யாமல் பணத்தைச் சேமிப்பவன், கடிகாரத்தை நிறுத்திவிட்டு நேரத்தைச் சேமிக்கும் மூடனுக்கு ஒப்பாவான் என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. இன்றைய வியாபார உலகம் விளம்பரத்தின் விரல்களைப் பிடித்துக் கொண்டே ஒவ்வொரு வினாடி நேரமும் நடக்க வேண்டியிருக்கிறது. சற்று ஓய்வெடுத்தால் கூட அந்த இடத்தை அபகரிக்க ஏராளமான போட்டிப் பொருட்கள் சந்தையில் இருப்பதால்தான் உலகின் முதன்மையான பொருட்களுக்குக் கூட விடாமல் விளம்பரம் செய்கிறார்கள்.

இந்த புதுமையான விளம்பரங்களின் வேகத்தில் பயன்பாட்டாளர்களுக்கு எது உண்மையான விளம்பரம், எது தவறான முடிவுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. விளம்பரங்கள் ஒரு பொருளின் விற்பனைக்காகவும், அதை சந்தையில் பிரபலப்படுத்துவதற்காகவும், புது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் தயாரிக்கப்படுகின்றன.

விளம்பரங்களின் கவர்ச்சியும், ஆடம்பரமும் பல வேளைகளில் தரத்துக்கும் அதிகமான பணத்தைக் கொடுக்க வேண்டிய சூழலை வாங்குபவர்களுக்கு ஏற்படுத்தி விடுகின்றன. நடிகைகளோ, நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ தங்கள் புகழைப் பயன்படுத்தி எந்தப் பொருள் அதிக வருவாயை அவர்களுக்குத் தருகிறதோ அந்தப் பொருளுக்கு விளம்பரம் செய்கிறார்கள். பிரபலங்களை முன்மாதிரியாகக் கொண்டு வாழ்பவர்களை வசீகரிக்கின்றன இத்தகைய விளம்பரங்கள்.

சுமார் ஒரு ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் பன்னிரண்டு ரூபாய்க்கு விற்க முடிகின்றன என்றால் அதற்குக் காரணம் விளம்பரக் கவர்ச்சியே. வெறும் தண்ணீரைக் கூட விளம்பரங்களின் உதவியினால் லிட்டர் பன்னிரண்டு ரூபாய் என்னும் கணக்குக்கு விற்க முடிவதே விளம்பரங்களினால் வரும் தாக்கம் எனக் கொள்ளலாம்.

பெண்களை முன்னிலைப்படுத்தியே இன்றைக்கு பெரும்பாலான விளம்பரங்கள் வருகின்றன. அதிலும் பெண்களின் கவர்ச்சியை முதலீடாகக் கொண்டே இன்று பெரும்பாலான பொருட்கள் விற்பனையில் முன்னோக்கி நகர்கின்றன. ஆண்களின் ஆடைகளுக்கான விளம்பரமானாலும் சரி, முகப் பூச்சு விளம்பரமானாலும் சரி, காலணி விளம்பரமானாலும் சரி எல்லாவற்றிலும் பெண்கள் பெண்கள் பெண்கள். அதிலும் எல்லா விளம்பரங்களுமே பெண்களைக் கவர்வதற்காகவே மட்டுமே ஆண்கள் அலைவது போல காட்டுவது பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் ஒருசேர இழிவு படுத்துகின்றது.

நான்கு நண்பர்கள் கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அழகான மூன்று பெண்கள் அவர்களைக் கடந்து செல்கிறார்கள். அப்போது நண்பர்களிடம் 'பீர்' வருகிறது. கவனிக்காமல் சென்ற பெண்களெல்லாம் ஓடி வந்து அவர்கள் மேல் புரள்கிறார்கள் என்பது ஒரு விளம்பரம். பீர் குடிக்கும் ஆண்கள் பெண்களை வசீகரிக்கிறார்கள் என்று ஆண்களை வசீகரிக்கிறது இந்த விளம்பரம். உலகின் 85% பீர் ஆண்களால் குடிக்கப்படுகிறது. பீர் சிறந்தது என்றோ, தரமானது என்றோ, ஆரோக்கியமானது என்றோ எந்த விதத்திலும் விளம்பரப்படுத்த முடியாது எனவே விளம்பர உலகம் கண்டு பிடித்த உத்தி அரைகுறை ஆடை பெண்கள்.

பெண்களை விளம்பரங்களில் பயன்படுத்துவது போலவே குழந்தைகளை விளம்பரங்களில் பயன்படுத்துவதும் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. இன்றைய வர்த்தக உலகில் பெற்றோருடன் கடைக்குச் செல்லும் குழந்தைகளைக் கவர வேண்டுமென்பதற்காகவே தயாரிக்கப்படும் இத்தகைய விளம்பரங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கான பொருட்களை முன்னிலைப்படுத்துபவை அல்ல என்பது கவனிக்கத் தக்கது. VOICE என்னும் தன்னார்வ நிறுவனம் செய்த ஆய்வில் இன்றைய பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளை விட குறைந்த விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் பிரபலமற்ற நிறுவனங்களின் பல பொருட்கள் தரத்தில் சிறந்து விளங்குவதாகக் கூறி பட்டியலிட்டிருக்கிறது.

வாகன விளம்பரமெனில் பெண்கள் வாகனத்தில் சாய்ந்து மோகப் பார்வை பார்க்க வேண்டும், சோப்பு விளம்பரமெனில் பெண்கள் குளிக்க வேண்டும், புதிய எஃப் எம் விளம்பரமெனிலும் கூட பெண்களின் உச்சகட்ட வியர்வை முகம் தான் தேவைப்படுகிறது. இவை இன்னும் நமது சமூகத்தில் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பதை ஊக்கப்படுத்துகிறது. விலக்க நினைக்கும் ஆணாதிக்க சூழலை மீண்டும் சமூகத்தில் உருவாக்குகிறது.

இன்றைக்கு விளம்பர உலகம் நிழலைப் போல நம்மைத் துரத்துகிறது. விளம்பரங்கள் இல்லாத இடமே இல்லை எனலாம். தொலைக்காட்சி, திரைப்படம், பத்திரிகை, வானொலி, தொலைபேசி என ஆரம்பித்து இவை எல்லா இடங்களிலும் நுழைந்துவிட்டன. இணைய உலகிலும் விளம்பரங்கள் தலைவிரித்தாடுகின்றன என்பதற்கு தினமும் வரும் விளம்பர மின்னஞ்சல்களும், இணைய தளங்களை ஆக்கிரமித்திருக்கும் விளம்பரங்களுமே சாட்சி.

விளம்பரங்கள் பண்டைய காலத்திலேயே ஆரம்பித்து விட்டன. பண்டைய எகிப்தில் விளம்பரங்கள் பாப்பிரஸ் தாள்களில் எழுதப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. ரோம், கிரீஸ் போன்ற நாடுகளில் இந்த பாப்பிரஸ் பயன்பாடு இருந்திருக்கிறது. அன்றைய நாட்களில் சுவர்களிலும், பாறைகளிலும் செய்திகளை படங்களாக வரைந்து வைப்பது இன்னொரு வகை விளம்பரமாக இருந்திருக்கிறது. இன்றைக்கும் இந்த விளம்பர யுத்திகள் பல நாடுகளில் தொடர்வது ஆதி காலத்துக்கும் நமக்குமிடையே உள்ள விளம்பர இணைப்பாகவே கருத வேண்டியிருக்கிறது.

சுவரில் விளம்பரம் செய்வது கி.மு 4000 ஆண்டிலேயே ஆரம்பித்திருக்கிறது. பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளில் ஓவியம் வரைதல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி இந்த விளம்பர யுத்தியை இன்னும் பிரபலப் படுத்தியது. முதன் முதலாக விளம்பரங்கள் பத்திரிகையில் வெளியாக ஆரம்பித்தது சுமார் பதினேழாம் நூற்றாண்டில். இந்தப் பெருமையை இங்கிலாந்து தக்க வைத்துள்ளது.

பத்தொன்பதாம் நுற்றாண்டில் தான் இந்த விளம்பரங்கள் வளர்ச்சியடையத் துவங்கின. 1843ம் ஆண்டும் முதல் விளம்பர நிறுவனம் அமெரிக்காவில் பிலடெல்பியா மாநிலத்தில் நிறுவப்பட்டது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சோப் விளம்பரம் ஒன்றே முதல் பாலியல் கவர்ச்சி சார்ந்த விளம்பரம். அதில் ஒரு பெண் காதலனிடம் 'நீ தொட விரும்பும் மேனி' என்பாள் !. அப்போதைய ஆபாச விளம்பரம், தற்போதைய விளம்பரங்களுடன் ஒப்பிட்டால் மிகவும் கண்ணியமான விளம்பரம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

1920களில் வானொலி சேவை ஆரம்பிக்கப் பட்டபோது முதலில் விளம்பரங்கள் இல்லாமல் தான் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் பட்டன. சில ஆண்டுகளிலேயே வானொலி நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு விளம்பரதாரர் வழங்கும் வழக்கம் ஆரம்பமானது. நிகழ்ச்சி துவங்கும் முன்னரும், முடிந்த பின்னரும் அந்த விளம்பரதாரர் பற்றிய குறிப்புகள் வாசிக்கப்பட்டன. 1950களின் ஆரம்பத்தில் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் பயன்படத் துவங்கின.

1960 களில் இந்த விளம்பரங்கள் நவீனப்படுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில் தான் விளம்பரங்கள் மக்களை வசீகரிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன், புதிய புதிய சிந்தனைகளையும், எண்ணங்களையும் உள்வாங்கிக் கொண்டன. விளம்பரங்கள் தயாரித்தல் ஒரு கலை போன்ற தோற்றம் ஏற்படத் துவங்கியது. 1980 களில் கேபிள் தொலைக்காட்சி வந்தபின், இந்த விளம்பரங்கள் இன்னொரு தளத்தை எட்டிப் பிடித்தன.

இன்றைய உலகில் இணைய தளங்களும், தொலைக்காட்சியும் விளம்பரங்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. பொது இடங்களில் டிஜிடல் விளம்பரப் பலகைகள் வைப்பது இன்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. பார்வையாளர்களைக் கவரும் நோக்கில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கவர்ச்சிகரமான விளம்பரப் பலகைகள் பல நேரங்களில் விபத்துகளுக்கும், சாலை நெரிசலுக்கும் வழி வகுத்து விடுகின்றன.

வாகனங்களில் விளம்பரப் பலகைகளை வைத்து தெருக்களெங்கும் விளம்பரப் படுத்தும் வழக்கமும் பிரபலமான ஒன்று. பெரும்பாலும் விழாக்கள், தேர்தல், விழிப்புணர்வு செய்திகள் போன்றவற்றுக்கான இவை பயன்படுத்தப்படுகின்றன

தெருமுனைகளில் கைகளில் விளம்பரப் பலகைகளைப் பிடித்து விளம்பரம் செய்யும் முறை மிகவும் பழமையானது. ஆயினும் அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாழும் இடங்களில் இத்தகைய விளம்பரங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது வியப்புக்குரியது.

விளம்பர உலகில் கோடிக்கணக்கான பணம் புரள்கிறது. அமெரிக்காவில் சூப்பர் பவுல் கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் ஒளிபரப்பப் படும்போது இடையே முப்பது வினாடிகள் விளம்பரம் காண்பிக்க சுமார் மூன்று கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இத்தனை அதிக பணம் வசூலித்தாலும் செலவிடுவதற்கு ஏராளமான வர்த்தகர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

பெரியவர்கள் விளம்பரங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் பிரித்தறிவது போல குழந்தைகளால் பிரித்தறிய முடிவதில்லை. சுமார் ஐந்து வயது வரை குழந்தைகள் விளம்பரங்களை நிகழ்ச்சிகள் என்றே நினைக்கின்றன. எனவே இந்த வயதில் குழந்தைகளுக்கு தரமான நிகழ்ச்சிகளை மட்டுமே காண்பிக்க வேண்டும் என்று மனோதத்துவ மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தரமற்ற திரைப்படங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் தரமற்ற, சமூக நல்லுணர்வுக்கோ, கலாச்சார அமைப்புக்கோ பங்கம் விளைவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி அருகே விளம்பரங்கள் வைப்பதை தடை செய்வது மாணவர்களின் கவன சிதைவைத் தடுக்கும்.

நியூசிலாந்து, தென் அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்ப நாடுகளில் விளம்பர நிறுவனங்களே ஒரு நியதி வகுத்திருக்கின்றன. அதை மீறி வேறு விளம்பர நிறுவனங்களோ, தனி நபர்களோ தரமற்ற, தகுதியற்ற விளம்பரங்களை உருவாக்க முடியாது. சட்டத்திற்கு உட்பட்ட, நேர்மையான, கண்ணியமான உண்மையான விளம்பரங்களையே தயாரிக்க வேண்டும் என்பது அவர்களுடைய நியதியின் மையம். இந்தியாவிலும் விளம்பர நிறுவனங்கள் குழு ( AAAI ) மற்றும் அட்வர்டைசிங் ஸ்டாண்டர்ட் கவுன்சில் ஆஃப் இந்தியா போன்றவை இருந்தாலும் அவை வெறும் பெயரளவில் தான் இயங்குகின்றன.

ஐரோப்பா யூனியன் 2005ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் புகையிலை சார்ந்த விளம்பரங்களை பத்திரிகை, வானொலி, இணையம் போன்றவற்றில் காட்டுவதற்கு தடை விதித்திருக்கிறது. பல நாடுகளில் புகையிலை, மது விளம்பரங்கள் தடை செய்தாலும் விளம்பர நிறுவனங்கள் மதுவின் பெயர்களில் 'சோடா', 'மினரல் வாட்டர்' என்று ஏதேனும் விளம்பரங்களைக் கொடுத்து மறைமுகமாக மது விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். பல தன்னார்வ அமைப்புகள் புகையிலை, மது போன்றவற்றுக்கு எதிரான விளம்பரங்களை சமூக நலன் நோக்கில் வெளியிடுவதும் உண்டு

செய்தித்தாள்களில் விளம்பரம் செய்வது இன்று எளிதாகி விட்டது. செலவு குறைவு என்பதாலும், பரவலாக பலரைச் சென்றடைவதாலும், மாற்றங்கள் செய்வது எளிது என்பதாலும், எப்போது வேண்டுமானாலும் வாசிக்க முடிவதனாலும் செய்தித் தாள் விளம்பரங்கள் பிரபலமாக இருக்கின்றன. எனினும் தரமான படங்கள், விளம்பரத்தின் அளவுகள், விளம்பரம் வெளியாகும் பக்கம், பத்திரிகை வெளியாகும் நாள் போன்றவற்றைப் பொறுத்தே அதன் வீச்சு இருக்கும் என்னும் குறைபாடுகளும் இருக்கின்றன. நிலம் விற்பது வாங்குவது, பழைய பொருட்கள் விற்பனை செய்தல், வேலை வாய்ப்புச் செய்திகள், திரைப்படச் செய்திகள் போன்றவை இன்று பத்திரிகைகளில் பெருமளவு இடம்பிடிக்கின்றன.

மிகைப்படுத்தலே பெரும்பாலான விளம்பரங்களின் இன்றைய நிலை. அதற்கு சரியான மேற்பார்வை இல்லாததும், தெளிவான வரையறைகள் இல்லாததும் இப்படிப்பட்ட விளம்பரங்கள் புற்றீசல் போல வளர துணை செய்கின்றன. இன்றைய டெலி ஷாப்பிங் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

விளம்பரங்கள் பெரும்பாலும் தொடர்ந்து பயன்பாட்டாளர்களை வாங்க வைக்கவும், இருப்பது நல்லதல்ல புதியதே நல்லது என்னும் ஆசையை மனதில் தூண்டிவிடும் வகையிலுமே இருக்கின்றன. பலர் இந்த விளம்பரக் கவர்ச்சியில் விழுந்து பணத்தை கண்டபடி செலவு செய்து வாடுவதும் உண்டு. சரியான உதாரணமாய் சமீப கால கைபேசி விளம்பரங்களைச் சொல்லலாம்.

ஒரே தரத்தில் தயாராகும் இரண்டு பொருட்களைக் கூட விளம்பரக் கவர்ச்சிகள் வெவ்வேறு திசைக்கு இழுத்துச் செல்லும் அபாயம் நிகழ்கின்றன. இருப்பதைக் கொண்டு நிம்மதியாய் வாழும் வாழ்க்கை முறைக்கு இந்த விளம்பரங்கள் பல வேளைகளில் வேட்டு வைத்து விடுகின்றன. ஆனந்தம் என்பது பொருட்களில் இருப்பதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்தி விடுகின்றன.

மருத்துவம் சார்ந்த விளம்பரங்கள் போலித்தனமாய் தங்களை மிகைப்படுத்திக் கொள்ளும்போது சமுதாயக் கேடு விளைகிறது. சீனாவில் கடந்த ஆண்டு போலி மருந்து உட்கொண்டதனால் பலர் உயிரிழக்க நேரிட்டதாக சீனாவின் மருத்துவ ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய மருத்துவம் சார்ந்த விளம்பரங்களை அரசு தனியே கவனத்தில் கொண்டு வகைப்படுத்த வேண்டியது அவசியம்.

திரைப்படத்துக்குத் தணிக்கை இருப்பதுபோல முறைப்படுத்தப்பட்ட தணிக்கைக் குழுக்கள் விளம்பரங்களுக்கும் இருக்க வேண்டும். வெறும் சட்டத்தில் இருக்கும் தணிக்கைக் குழுக்களாக அவை செயல்படாமல் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டும். சமூக அமைப்பிற்கும், அமைதிக்கும், கலாச்சார மரியாதைக்கும் பங்கம் விளைவிக்கும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும். விளம்பரங்களுக்கான தெளிவான விதிகள் தயாரிக்கப் படவேண்டும். புகை பிடிப்பதைக் காட்டும் விளம்பரங்கள் தடை செய்யப்பட்டிருப்பது போல, விளம்பரங்களில் தேவையற்ற பாலுணர்வு தூண்டும் காட்சிகளோ, இளைஞர்களை தவறாக சிந்திக்கத் தூண்டும் விளம்பரங்களோ தடை செய்யப்பட வேண்டும்.

ஷங்காய் அரசு மருத்துவம் சார்ந்த விளம்பரங்களை முழுமையாக அலசிய பின்பே வெளியிட அனுமதிக்கிறது. இது மருத்துவம் சார்ந்த விளம்பரங்களில் போலியாக இருந்த சுமார் அறுபது சதவீதம் விளம்பரங்களை அகற்ற துணை செய்திருக்கிறது. இந்திய அரசு கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சியில் வெளியாகி வந்த 'உலகின் கவர்ச்சிகரமான விளம்பரங்கள்' நிகழ்ச்சிக்குத் தடை விதித்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் நிலையை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்த பெப்சியின் விளம்பரம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசு தடை செய்தது. அமெரிக்காவில் எட்டு நிறுவனங்கள் போலி விளம்பர சர்ச்சையில் சிக்கி மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு சில நிகழ்வுகள் நடந்தாலும் விளம்பர உலகம் புதுப் புது வசீகர சிந்தனைகளை செய்து கொண்டே இருக்கின்றது. விளம்பரங்களின் நோக்கம் எதுவானாலும் அது சமூக கட்டமைவுக்கு பங்கம் விளைவிப்பதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம். நேர்மை, கண்ணியம், சமூகப் பொறுப்புணர்வு, கலாச்சார விழிப்புணர்வு போன்றவை விளம்பரங்களில் தெரியும் நாளில் தான் சமுதாயம் அர்த்தப்படும், விளம்பரங்களும் வாழ்த்தப்படும்.

Wednesday, May 9, 2007

விமர்சனப் போட்டி அறிவிப்பு

சற்றுமுன்... ஆயிரம் பதிவுகளை எட்டுவதை முன்னிட்டு மாபெரும் போட்டியை நடத்துகிறது. இது ஒரு செய்தி விமர்சனக் கட்டுரைப் போட்டி.

போட்டிக்கான செய்திக்கட்டுரைகளின் வகைகள்:-

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம்/வணிகம்

மேற்கண்டவற்றில் எந்த வகையின் கீழூம் செய்திகளின் அடிப்படையில் பின்னப்பட்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும் .

செய்திக்கட்டுரைகளின் விபரம்:-

நடப்புச் செய்திகளையோ அல்லது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையோ தொகுத்து முடிவுகளை எட்டும் கட்டுரைகளை வரையலாம்.

ஒரு தலைப்பின் கீழ் சில செய்திகளைத் தொகுத்து முடிவுகளைத் தரலாம். எடுத்துக்காட்டுக்கு, 'பெண்ணியம் ' எனும் தலைப்பின் கீழ் செய்திகள் , புள்ளிவிபரங்களைக் கொண்டு கட்டுரை வரையலாம். நானோ நுட்பம் (Nanotechnology) குறித்த செய்திக் கட்டுரை எழுதலாம்.

ஏற்கனவே வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் எதிர்காலம் பற்றிய கட்டுரைகள் வரையலாம்.

செய்திகளை நையாண்டி செய்யும் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பரிசுகள் :

மொத்தபரிசுகள்: -

1. மொத்தத்தில் முதல் பரிசு ரூ . 1500/- மதிப்புள்ள புத்தகங்கள்

2. மொத்தத்தில் இரண்டாம் பரிசு ரூ . 1000/- மதிப்புள்ள புத்தகங்கள்.

3. மொத்தத்தில் மூன்றாம் பரிசு ரூ . 500/- மதிப்புள்ள புத்தகங்கள்.

ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழும் பரிசுகள் :-

இதன் கீழ் மொத்தம் 15 பரிசுகள், ஒவ்வொன்றும், ரூ.500/- மதிப்புள்ள புத்தகங்கள். அதாவது கீழுள்ள ஒவ்வொரு வகைப்பாட்டிற்கும் மூன்று சமமான பரிசுகள்

அரசியல்

சமூகம்

அறிவியல் /நுட்பம்

விளையாட்டு

பொருளாதாரம் /வணிகம்

வித்தியாசமான கட்டுரைக்கான பரிசுகள்:-

வசீகரமான, வித்தியாசமான தலைப்புள்ள கட்டுரைக்கு ரூ. 500/- பரிசு (இது வலைப்பதிவர்களுக்கு மட்டுமான பரிசு)

சிறப்பு பரிசுகள் :-

போட்டிக்கு முதலில் சமர்ப்பிக்கப்பட்டு தகுதி பெறும் கட்டுரைகளுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு .

பரிசுகளில் உங்களின் விருப்பம்:-

வெற்றி பெற்றவர் விரும்பினால் பரிசுத் தொகையைத் தான் விரும்பும் ( அல்லது சற்றுமுன் தேர்ந்தெடுக்கும்) ஒரு சமூக சேவைக்கு வெற்றி பெற்றவரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும் .

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி :

பதிவர்கள் தங்கள் பதிவுகளில் பதித்துவிட்டு satrumun@gmail.com ற்கு சுட்டியை மின்னஞ்சல் செய்யலாம் .

அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகத் தரலாம்.

எந்தப் பிரிவின் கீழ் கட்டுரை சேர்க்கப்பட வேண்டும் என்பதை ஆசிரியரே குறிப்பிடவேன்டும். இப்படிக் குறிப்பிடப்படாத கட்டுரைகளுக்கு சற்றுமுன் குழுவே பிரிவைத் தேர்ந்தெடுக்கும் .

பதிவர் அல்லாதவர்களும் முடிந்தவரை தமிழ் ஒருங்குறியில் தட்டச்சு செய்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். ஒருங்குறியில் எழுத இயலாதவர்கள் மட்டும் பிற எழுத்துருக்களிலும் அனுப்பலாம்.

கட்டுரைகளை அனுப்ப கடைசி நாள் : ஜூன் 10, 2007

சில விதிமுறைகள் :

போட்டிக்கு அனுப்பப்படும் கட்டுரைகளை போட்டியில் சேர்த்துக் கொள்வது சற்றுமுன் குழுவின் முடிவே.

ஏற்கனவே வெளியான படைப்புகள் ஏற்கப் பட மாட்டாது.

மே 8 மற்றும் அதற்குப் பின் எழுதப் பட்ட விமர்சனக் கட்டுரைகளாக இருக்க வேண்டும்.

ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.

பரிசு ஒருவருக்கு ஒன்று மட்டுமே வழங்கப் படும்

போட்டியின் விதிகளை மாற்றி அமைக்கவோ புதிய விதிகளை ஏற்படுத்தவோ உள்ள அதிகாரத்தை சற்றுமுன் தக்கவைத்துக் கொள்கிறது.

ஆயிரம் பதிவுகள் கண்ட அபூர்வக் குழு

ஆனா நிக்கோல் ஸ்மித்துக்கும் சற்றுமுன் குழுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் நம்ப இயலுமா?

ஆனா நிக்கோல் ஸ்மித்தின் மரணம் CNNன் Breaking News சேவை வழியாக எனக்கு மின்னஞ்சலில் வந்தபோதுதான் சுடச்ச்சுட உடைபடும் செய்திகளைத் தர ஒரு பதிவை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. எப்போதும் திரட்டிகளையே பார்த்துக்கொண்டிருக்கும் பதிவர்களுக்கு அவை மூலமே செய்திகளை எடுத்துச் செல்வது சிறந்த சேவையாகத் தோன்றியது.

அன்று மாலையே பாஸ்டன் பாலாவுடன் தொலைபேசினேன். அப்புறம் எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதைதான்.

சற்றுமுன் குழுவுக்கு கிடைத்த முதல் வெற்றி அந்தக் குழு அமைந்ததுதான். அனுபவம் மிக்க, செய்திகளை படிப்பதிலும் பகிர்வதிலும் ஆர்வம் கொண்ட பதிவர்கள் குழுவின் உறுப்பினர்களானதுதான் சற்றுமுன்னுக்கு கிடைத்த முதல் வெற்றி. அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும்.

1000 பதிவுகளில் சிங்கப்பூரில் உணரப்பட்ட நில நடுக்கத்தை கோவி. கண்ணன் சிவபாலனுக்கு தெரிவிக்க மற்ற ஊடகங்களில் செய்தி ஏதும் வ்வரும் முன்னரே சற்றுமுன்னில் வந்த பதிவு ஒரு முக்கிய பதிவாக அமைந்தது எனச் சொல்லலாம். இதுதான் சற்றுமுன்னின் முக்கிய நொக்கம். உலகெங்குமுள்ள பதிவர்கள்மூலம் செய்திகளை சேகரித்து வெளியிடுவது. ஒரு மாபெரும் சேவையை நம்மால் இதன்மூலம் உருவாக்க இயலும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது நடந்த பின்னூட்ட உரையாடல்கள் இன்னுமொரு குறிப்பிடத் தகுந்த நிகழ்வு.

வெறும் சற்றுமுன் வந்த செய்திகளுக்கென்ற தளம் ஒரு செய்தி சேவையாகவே செயல்பட்டு வருகிறது. இந்த உருமாற்றமும் சற்றுமுன்னின் உறுப்பினர்களாலேயே சாத்தியமானது.

இன்று ஆயிரம் பதிவுகளைத் தாண்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. தினம் குறைந்தபட்சம் 500 முதல் 600 பக்கங்கள் வரை பார்வையிடப் படுகின்றன(Total hits).

பின்னூட்டங்களே அதிகம் இல்லாமல் இத்தனை பதிவுகளைத் தந்தது எப்படி என சென்னை சந்திப்பின்போது பலரும் கேட்டனர். அது சற்றுமுன் குழுவின் உறுப்பினர்களின் மனப்பாங்கையே காண்பிக்கிறது.

வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக செயல்பட சற்றுமுன் குழுவை ஊக்குவியுங்கள். செய்திகளைப் படிப்பதோடு நிற்காமல் அவற்றின் மீதான விமர்சனங்களை பின்னூட்டுங்கள். விவாதங்களை உருவாக்கி பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பகுதியில் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க முயலுங்கள்.

சற்றுமுன் 1000 போட்டி அறிவிப்பை படித்துவிட்டீர்களா? இதில் பங்களித்து சிறப்பியுங்கள்.

பதிவர்கள் ஒன்றாய் செயல்படுவது அரிதாய் தோன்றலாம் ஆனால் அடுத்த நிலைக்கு நாம் செல்ல வேறு எதுவும் வழி இருப்பதாய் தெரியவில்லை. புதிய முயற்சிகளை செய்துகொண்டே இருப்போம்.

பதிவுகள் பொது ஊடகத்துடன் கலக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. சற்றுமுன் போன்ற குழுத் தளங்களும் குழுக்களும் இதை துரிதப்படுத்துகின்றன என்றே சொல்வேன்.

உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவுக்கும் நன்றி.
சற்றுமுன் குறித்த விமர்சனங்களை satrumun@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புங்கள். அல்லது பின்னூட்டங்களில் தாருங்கள்.

அன்புடன்,
சிறில் அலெக்ஸ்

சற்றுமுன்-1000

2007 பிப்ரவரி 15 ம் நாள் சிறில் அலெக்ஸ் முயற்சியில் பாஸ்டன் பாலா ஆலோசனையுடன் சற்றுமுன் என்ற சூடானசெய்திகளைத் தரும் வலைப்பூ ஆரம்பிக்கப் பட்டது.

சூடான தலைப்புச் செய்திகளை தருவதற்கென்று உருவாக்கப் பட்ட இந்த தளத்தில் வெகு விரைவில் 20 உறுப்பினர்கள் பல்வேறு கண்டங்களில் இருந்து தன்னார்வ செய்தியாளர்களாக இணைந்து வலிமையான கூட்டுப் பதிவாக உருவாக்கி உலகத்தின் செய்திகளை சுடச்சுடத் தந்து பலருக்கு செய்தி என்றாலே சற்றுமுன் என்ற நிலையை வெகு விரைவாக அடைய உதவினார்கள்.

சற்றுமுன் உருவாகி சரியாக 83 ஆவது நாள் மே 8 அன்று 1000ஆவது பதிவு இடுகை இடப்பட்டு மாபெரும் சாதனைக்குரிய பதிவாக மாறிவிட்டது. சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் 1000ஆவது பதிவு நினைவுக் கொண்டாட்டமாக மாபெரும் விமர்சனப் போட்டி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது. வலைப்பதிவர்களும் வலைப்பதிவுக்கு வெளியே இணையத்தில் பங்களிப்பவர்களும் பங்கேற்கும் வகையில் இந்த மாபெரும் செய்தி விமர்சனப் போட்டி தீர்மானிக்கப் பட்டுள்ளது.

சற்றுமுன்னின் இந்த தொடரும் பயணத்தில் சிறில் அலெக்ஸ் தளநிர்வாகியாக சிறப்புற ஒருங்கிணைக்கிறார். தள வடிவமைப்பை சிந்தாநதி கவனித்துக் கொள்ள உலகெங்கிலும் இருந்து இணைந்துள்ள சக வலைப்பதிவர்களான பாஸ்டன் பாலா, சிவபாலன், மணியன், கவிதா, அதிரை புதியவன், மணிகண்டன், ரவிசங்கர், முத்துகுமரன், கோவி.கண்ணன், பாலபாரதி, ஆசிப் மீரான், பொன்ஸ், பெருசு, ராதா ஸ்ரீராம், துளசிகோபால், விக்கி, திரு ஆகியோர் செய்திகளை ஒருங்கிணைக்கின்றனர்.

இத்தனைப் பேரின் கூட்டு முயற்சியில் கூட்டுறவில் உருவாகி வளர்ந்துள்ள இந்த செய்தித் தளம் இன்னும் பல சிறப்புக்களை பெற்று மேலும் முன்னேறும் என்ற நம்பிக்கையோடு சற்றுமுன் நடத்தும் போட்டிகளின் ஒருங்கிணைப்புக்காக இந்த சற்றுமுன்1000 வலைப்பதிவு வெளியிடப் படுகிறது.